சுதந்திர இந்தியாவில் கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆட்சியாளர்கள் தங்களது விருப்பம்போல் போல் செயல்படாமல் மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும் என்பதே குடியரசின் நோக்கம். மக்களின் அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் பேணுவதற்கான உரிமையை குடியரசு தினம் நமக்கு உருவாக்கி தந்துள்ளது.
மக்களுக்கான ஆட்சியை வழங்குபவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என்ற மகத்தான ஜனநாயகத்தை ஆரம்பம் செய்து வைத்ததும் இக்குடியரசு தினமே. இந்த நிலையில், நாட்டின் 64வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கடந்த 60 ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பெற்றுள்ளதாக பிரணப் முகர்ஜி கூறினார்.
ஆனால், இந்தியா குடியரசாகி 64 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும், நாட்டில் வறுமையும் இன்னும் நீங்கியபாடில்லை. சாதாரண மக்களுக்கு மட்டுமின்றி, விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலரது நிலைமையும் இதுதான்.
அரியலூர் மாவட்டம் மணத்தான் குளத்தை சேர்ந்த ஜோசப் என்ற இந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜோசப், நேதாஜியின் படையில் சேர்ந்து ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டவர். இதன் பலனாக பர்மா சிறையில் பல ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர். சுதந்திரத்திற்கு பின்னர் விடுதலையாகி சொந்த ஊர் வந்த இவர், இன்று வரை ஒரு விவசாயக் கூலியாக, வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசுத் தினம் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே, இந்த நாடு தங்களை நினைத்துப் பார்ப்பதாக வேதனையுடன் பதிவு செய்கிறார் ஜோசப். அதன் பின்னர் எவரும் எங்களை கண்டுக் கொள்வதில்லை என்பதும் இவரது ஆதங்கமாக உள்ளது.
-பசுமை நாயகன்